நாமக்கல் அருகே ஒரே நாளில் 20,000 பனை விதைகள் நடவு செய்து விழிப்புணர்வு!
Namakkal King 24x7 |4 Nov 2024 4:47 AM GMT
வளையப்பட்டி பகுதியில், தனியார் விவசாய நிலத்தில், 20,000 பனை விதைகள் நடவு செய்யும் பணியில், விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழகத்தில், மாநில மரமாக பனை மரம் விளங்கி வருகிறது. பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழக பசுமை இயக்கம் சார்பில், ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல், பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட, 8 மாவட்டங்களில், காவிரிக்கரையின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., தூரத்திற்கு இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களிலும், நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி, கடந்த, செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வளையப்பட்டி பகுதியில், தனியார் பட்டா நிலங்களில் பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது.விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டா நிலங்களில், 20,000 பனை விதைகள் ஒரே நாளில் நடவு செய்யப்பட்டது. இது குறித்து, விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது.... நாமக்கல் மாவட்டத்தில், ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை ஒரு ஆண்டுக்கு முன் துவங்கினோம், இன்று ஒரே நாளில், 20,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரைபோட்டான் ஆற்றின் கரையோரம், ஏரிக்கரைகள், நீரோடை கரைகளில் அரசின் அனுமதி பெற்று பனை விதைகள் நடவு செய்ய உள்ளோம். தற்போது பனை விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ராமநாதபுரத்தில் இருந்து பனை விதைகள் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story