ஆவது “திருக்குறள் மாணவர் மாநாடு-2025" நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றியடைந்த சுமார் 1000 மாணவர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025 நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள், திருக்குறளை ஏன் கற்க வேண்டும். அது எந்த வகையில் பயன்படும் என்ற மிகச் சிறப்பான கேள்வு எழும். பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து சிறந்த மதிப்பெண்களை பெற்று, தமிழ்நாட்டினுடைய தலைசிறந்த கல்லூரிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கு பெரும்பாலும் ஆர்வத்தோடு இருப்பீர்கள். ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னோர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது தன்னேர் இலாத தமிழ்! என்ற பாடலினுடைய மையப் பொருள் உலகின் இருளை அகற்றுவதற்கு இரண்டு பொருள்களால் முடியும். ஒன்று உதிக்கும் சூரியன். சூரிய வெளிச்சத்தில் உலகின் உடைய இருள் போகும். அதே போல் இந்த உலகின் உடைய இருளை அகற்றுவதற்கு தமிழும் இருக்கிறது என்று தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. உலகில் எவையெல்லாம் காலம் காலமாக மனிதர்களுடைய அறியாமையிலோ அல்லது சுயநலத்திலோ மனிதர்களுக்கு கிடைக்காமல் போகிறதோ, அதை தத்துவங்கள் விட்டு நிரப்பும். அதற்குத்தான் இலக்கியங்கள் உலகெங்கும் பிறந்திருக்கின்றன. மனிதர்களுடைய வாழ்வியலுக்கு தத்துவங்களும், அறக்கருத்துக்களும் மிக மிக அவசியம். அந்த தத்துவங்களை அறக்கருத்துக்களை அதனுடைய பயனை இரண்டாக வகுக்க முடியும். இதை தமிழ் இலக்கியத்தில் திருக்குறளில் மட்டுமல்ல உலகின் செம்மார்ந்த இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் இந்த இரண்டு பகுப்பை பார்க்க முடியும். ஒன்று சமூகத்திற்கு என்ன தருகிறது. இன்னொன்று தனிமனித முன்னேற்றத்திற்கு என்ன தருகிறது. தனி மனிதன் முன்னேறியதற்கு பிறகு அவன் வழியாக இந்த சமூகம் முன்னேறும். இந்த சமூகத்தை எல்லோரும் முன்னேற்றுவார்களா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. அதைக்கான விடையை திருக்குறளில் இருந்து எடுக்க முடியும். இந்த சமூகத்தின் போக்கை தீர்மானிக்கக் கூடியவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு சில மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை நமது இலக்கியங்கள் மட்டுமல்ல சாக்ரடீஸ் போன்ற அரசியல் தத்துவங்கள் ஞானிகளும் குறிப்பிடுகிறார்கள். மருத்துவ துறையில் அதனுடைய போக்கை அடுத்த அரை நூறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்க கூடியவர்களும், பொறியியல் துறையினுடைய அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் அதனுடைய போக்கை தீர்மானிக்க போவதும், அற இலக்கியங்களால் சமூகத்தினுடைய போக்கை தீர்மானிப்பவர்களும் ஒரு சில மனிதர்கள் தான். அப்படிப்பட்ட மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த தனி மனித முன்னேற்ற வாழ்வியல் தத்துவங்களை இலக்கியத்தின் வழியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மைய நோக்கத்தில் தான் நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக தான் இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டினுடைய மையக் குறலும் இதுதான். இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்” ஆகிய திருக்குறளில் ஒரு விஷயத்தை அது முடியும் வரை அதற்காக காத்திருப்பது அல்லது முடியும் வரை அதற்காக முயற்சி செய்வது என்பதை எல்லோரும் செய்வதில்லை. சில நபர்கள் தான் செய்கிறார்கள். எல்லோரும் அந்த இலக்காக அடையும் வரை சென்று முயற்சி செய்வதில்லை. அதனுடைய வழியை அறிந்து முடியும் வரை வெற்றி பெறக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உங்களுடைய ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்து, கல்லூரிகளில் இருந்து சென்றதற்கு பிறகு ஆசிரியர்களுடைய அறிவுரை உங்களுக்கு கிடைக்காது. பெற்றோர்களுடைய அறிவுரை குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கசக்கும். நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். நண்பனாய், நல்ல ஆசிரியனாய், தத்துவ ஞானியாய் ஒரு புத்தகமும் ஒரு தத்துவங்களும், திருக்குறளும் எக்காலத்திற்கும் நமக்கு உறுதுணையாக இருக்கும். அதனால்தான் இலக்கியங்களையும் புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இன்னொன்று இந்த இலக்கியங்கள் எல்லாம் தாண்டி, உங்களுடைய எதிர்கால திட்டமிடுதல் குறித்தும், என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது என்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இப்போது இருந்து அறுபது ஆண்டுகள் திட்டமிட வேண்டுமென்றால், அதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து செயல்பட வேண்டும். உங்களுக்கான ஆர்வம் என்பது ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால் அதற்காக மட்டுமே உங்களுக்கான முடிவை எடுக்கலாமா என்பது குறித்து நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். எனவே எதிர்கால வாய்ப்புகள், உங்களுக்கான திறன்கள் எதற்கு பொருந்தும், உங்களுடைய விழிப்புணர்வு இந்த வயதில் குறைவாக இருக்கிறது என்றால் விழிப்புணர்வை பெற்ற ஆசிரியர் பெருமக்கள், உறவினர்கள், பெற்றோர்களிடம் கலந்து உங்களுடைய இலக்கை தீர்மானிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் முன்பே திட்டமிடக் கூடியவர்கள் நல்ல வாய்ப்பை பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ச்சியான செயல்பாடுகளின் காரணமாக திறமையை ஒருவர் வளர்த்துக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நீங்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த கல்வி வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுபோல இலக்கியங்களை திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது மதிப்பெண்களுக்காக தேர்வுகளுக்காக என்பதை தாண்டி புரிந்து கொள்வதற்கான ஒரு நடவுதான். அதற்கான விதை நெல் தான் இன்று உங்களுக்கு தரப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு எளிய அறிமுகத்தை செய்வதுதான் இந்த நிகழ்ச்சி. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் மிகச் சிறப்பாக அதன் நோக்கத்தை நிறைவேற்றிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார். இந்த 2_வது திருக்குறள் மாணவர் மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் செல்வன்.விஷ்ணு என்பவருக்கு முதல் பரிசும், அரியலூர் மாவட்டம், நடுவலூர் பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி நடுவலூரை சேர்ந்த மாணவி செல்வி.கவிநயா என்பவருக்கு இரண்டாம் பரிசும், விருதுநகர் மாவட்டம் எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.கனிஷ்கா ஸ்ரீ என்பவருக்கு மூன்றாம் பரிசும், வினாடி- வினா போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முதல் பரிசும், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாம் பரிசும், விருதுநகர் மாவட்டம் மூன்றாம் பரிசும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ரங்கா ராங் லயன்ஸ் பதின்ம பள்ளியை சேர்ந்த மாணவன் செல்வன்.ஹரி கிருஷ்ணா என்பவருக்கு முதல் பரிசும், தருமபுரி மாவட்ட அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.கோகிலா என்பவருக்கு இரண்டாம் பரிசும், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.ஹரிணி என்பவருக்கு மூன்றாம் பரிசும், சிறுகதை எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், வித்யா விகாசினி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. இலக்கியா என்பவருக்கு முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. ஜெயஸ்ரீ என்பவருக்கு இரண்டாம் பரிசும், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.கே.டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் செல்வன். ஆண்டோ ஜெப்ரி என்பவருக்கு மூன்றாம் பரிசும், நடனம், நாடகம், பாவனை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குழுவிற்கு(நடனம்) முதல் பரிசும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குழுவிற்கு(நாடகம்) இரண்டாம் பரிசும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குழுவிற்கும்(நாடகம்), விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் குழுவிற்கு(பாவனை நாடகம்) மூன்றாம் பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story

