உலக மக்கள் தொகை தினம்-2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மற்றும் விருதுநகர் குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக மக்கள்தொகை தினம்-2025 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். உலக மக்கள்தொகை வளர்ச்சியைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2025 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம் “, “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21, அதுவே பெண்ணுக்கும், திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது” என்ற கருப்பொருளுடன், பெண்கள் நாட்டின் கண்கள், ஏற்போம், ஏற்போம் வாழ்க்கை வளம் பெற குடும்ப நலம் ஏற்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள மகப்பேறு கட்டிடத்தில் தொடங்கி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பின்னர், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
Next Story

