வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, சிறப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |21 Nov 2025 7:20 PM ISTநாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026, சிறப்பு முகாம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வருகின்ற 22.11.2025 சனிக்கிழமை மற்றும் 23.11.2025 ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் இச்சீரிய பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்களும் பங்கெடுத்துக் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நாள் ஒன்றுக்கு 50 படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று உறுதிமொழி படிவத்துடன் இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்திடவும், மேலும், இச்சிறப்பு முகாமினை பொது மக்களிடம் கொண்டு சென்று பொது மக்கள் பயனடையும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மேற்படி சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


