வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 04.12.2025 மாவட்ட ஆட்சியர் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 04.11.2025 முதல் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று BLO App மூலம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தொடர்புடைய வாக்காளர்கள் திருப்பி வழங்க வசதியாக கடந்த 25.11.2025 முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்க கடைசி நாள் 04.12.2025 ஆகும்.எனவே, கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி நெருங்குவதால், வாக்காளர்கள் இறுதிவரை காத்திருக்காமல் ஒரிரு நாட்களில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் முகவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் திரும்ப கொடுத்து, தங்களது பெயர் வரை வாக்காளர் பட்டியல் 2026-ல் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


