கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச

X
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஆத்துப்பாலம் அருகில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலை கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த நிகழ்வின் போது, அவர்களிடத்தில் நம்முடைய விருதுநகர் மாவட்டத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்; பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முன்வைத்தோம். அதில் முக்கியமான கோரிக்கையாக கௌசிகா நதியை சீரமைத்து புனரமைக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த திட்டத்திற்கு உடனடியாக ஏறத்தாழ ரூ.20.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மகத்தான பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாடு நீர்வளத்தில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம். ஒவ்வொரு காலக்கட்டத்தில் நம்முடைய ஆறுகள், நீர்வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. நடந்தாய் வாழி காவிரி என்று காவிரி ஓடி வருகின்ற அழகை ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். காவிரி தென்பண்ணை பாலாறு -தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி -என மேவிய யாறு பலவோடத்திரு- மேனி செழித்த தமிழ்நாடு என பாரதியார் தமிழ்நாட்டின் சிறப்பை பாடியுள்ளார். ஒரு ஆறு ஓடுகிறது என்றால் அது தான் அந்த நாட்டின் உடைய செழிப்பிற்கு காரணம். காலநிலை மாற்றத்தால் நதிகளில் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படுகின்ற தாக்கம் உருவாகி இருந்தாலும், அவற்றை சீர்படுத்த வேண்டும் என்கின்ற கடமை அனைவருக்கும் இருக்க வேண்டும். அதனால் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுப்புற காலநிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நாம் நதிகள், நீர்நிலைகளை சீரமைத்தால் தான் விவசாயம், நிலத்தடி நீர்வளம் அனைத்தும் பெருகும். கௌசிகா நதியில் 11.50 கிலோ மீட்டர் வரையிலான நீளம் வரை தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ், நதியின் தடுப்பணை மற்றும் குறுக்கு கட்டுமான பணிகளை புனரமைத்து தடுப்புச்சுவர்அமைக்கும் பணிகளும், நகரத்தில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் எங்கெல்லாம் கலக்கிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, சுமார் 1.60 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, நதியில் கலக்காமல்; அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், சுமார் 2891 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறுகிறது. மேலும், நீர்மேலாண்மை, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாய உற்பத்தி திறனை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்யும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீர்நிலைகளை சீரமைக்க திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில், பாசன திட்டங்களான சென்னம்பட்டி, மறையூர் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளும், ஆனைக்குட்டம் அணைக்கட்டு பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. நம்முடைய உயிர் துளி என்கின்ற அடிப்படையில் நீர்வள ஆதாரத்தை பெருக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Next Story

