ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஜனவரி 21 ஆம் தேதி மறியல் போராட்டம்
Thanjavur King 24x7 |10 Jan 2025 6:26 AM GMT
மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திர பிரகாஷ், கோவி.ராதிகா, ஏ.சாமியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி, ஆந்திரா அரசைப் போன்று ஊனமுற்றோர்களுக்கு 6,000 ரூபாயும், கடும் ஊனமுற்றோர்களுக்கு 10,000 ரூபாயும், படுத்த படுக்கையாக இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு 15,000 ரூபாயும் வழங்கிட வேண்டும். ஏற்கனவே மனு கொடுத்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை, ஒன்றிய அரசு அறிவித்துள்ள அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட அட்டையாக மாற்றி அதன் மூலம் ரேஷன் கடைகளில் மாதா மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கிட வேண்டும் என அரசாணை இருந்தும், அதை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு, எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள தனித்துவம் வாய்ந்த யூடிஐடி கார்டு இதுவரை கிடைக்கப் பெறாமல் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும். எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை மாற்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற நடைமுறையை அமுல்படுத்தி, தினமும் வழங்கக்கூடிய தினக்கூலி ரூபாய் 319 ஐ குறைக்காமல் வழங்கிடவேண்டும். 100 நாள் வேலையில் பணித்தளப் பொறுப்பாளராக வேலை பார்ப்பவர்கள், 100 நாள் மட்டுமே பணித்தள பொறுப்பாளராக வேலை செய்ய முடியும் என்ற அரசாணை இருந்தும், பல ஊராட்சிகளில் ஒரு சிலர் தொடர்ந்து பணித்தள பொறுப்பாளராக இருப்பதை மாற்றி, தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அப்பணியை வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும், 21.01.2025 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்ற மாநிலக்குழுவின் அறைகூவலின் படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மேற்கண்ட தேதியில் மறியல் போராட்டம் நடத்துவது" என்று முடிவு செய்யப்பட்டது.
Next Story