மாநகராட்சிப் பணிகளை நிறைவேற்ற ரூ. 21.15 கோடி ஒதுக்கீடு: மேயர்

மாநகராட்சிப் பணிகளை நிறைவேற்ற ரூ. 21.15 கோடி ஒதுக்கீடு: மேயர்
X
மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஆண்டு வரை 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழாண்டு மீதமுள்ள 20 சதவீத சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.  இதன்படி தார் சாலைகளுக்கு ரூ. 13.65 கோடி, கான்கிரீட் சாலைகளுக்கு ரூ. 5.03 கோடி, புதிய பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ. 2.47 கோடி என மொத்தம் ரூ. 21.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் கோடி அம்மன் கோயில் பகுதியிலிருந்து புறவழிச் சாலையை முழுமையாக சீரமைக்க ரூ. 7 கோடிக்கு நிதி கோரி அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அந்த நிதியும் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தச் சாலைப் பணிகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும். தஞ்சாவூர் பெரிய கோயிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் திருக்கயிலாய வலம் வரும் பாதையை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது போன்ற பணிகள் தஞ்சாவூர் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து தரப்படவுள்ளன. மேலும், பெரிய கோயில் எதிரில் உள்ள கார் நிறுத்துமிட சாலைகளும் மேம்படுத்தப்படவுள்ளன. தஞ்சாவூர் நான்கு ராஜ வீதிகளிலும் இரு புறமும் திறந்தவெளி கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். அப்போது, மண்டலக் குழுத் தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story