மாவட்டத்தில் 2.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு

பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
நாகை நகராட்சி பெருமாள் தெற்கு வீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், கூட்டுறவுத் துறை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உணவு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் உ.மதிவாணன் ஆகியோரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது நாகை மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 363, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 13, மகளிர் கடைகள் 10 ஆக மொத்தம் 386 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த 386 ரேஷன் கடைகளில், பயன்பாட்டில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரத்து 631 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று தொடங்கி வழங்கப்பட உள்ளது. பச்சரிசி ஒரு கிலோ விதம் 217.631 டன், சர்க்கரை ஒரு கிலோ விதம் 217.631 டன், ஒரு முழு கரும்பு 2 லட்சத்து 17 ஆயிரத்து 631 ஆகியவை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவப்பிரியா, நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் முத்துக்குமார், கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர்கள் ராமசுப்பு, இளங்குமரன், சுகந்தி, நகராட்சி துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி கவுன்சிலர் அண்ணாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் பரிமளா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story