பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் 2,227 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் 2,227 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் பாடாலூர் திருவளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பால் கொள்முதல் நிலையம் மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை இன்று (01.08.2025)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் பால்வளத்துறையின் சார்பில், பால்வளத்துறையின் சார்பில், 85 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 2,227 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பாடாலூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உதவியுடன் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பாலினை கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் வகையில் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளையும், ரூ.121 கோடி மதிப்பீட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறித்த காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடித்திட பொறியாளர்களுக்கும், ஆவின் அலுவலர்களுக்கும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், அப்பகுதியிலேயே இயங்கி வரும் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, பாடாலூரில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பாலினை கையாளும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பால் கொள்முதல் நிலையம் மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையத்தின் பணிகள் அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் பவுடர் தயாரிக்கும் ஆலையின் மூலமாக பாடாலூரில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கப்படவுள்ளது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, சென்னை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாலின் உற்பத்தி அதிகமானால் திருச்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து பெரம்பலூரை தனி ஒன்றியமாக அறிவிக்கப்படும். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கால்நடை பராமரிப்பு கடன் உதவித்தொகை விண்ணப்பம் மட்டுமல்லாது பல்வேறு துறைகளின் சார்பாக கடன் உதவி தொகை கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் முறையாக பரீசிலிக்கப்பட்டு அனைவருக்கும் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 முதல் ரூ.4 வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விற்பனையினை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆவின் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வில் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பால்வளத்துறையை செம்மைப்படுத்தி பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்தி தரமான பால்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறோம் பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தினசரி பால் கொள்முதல் செய்யப்படுவது, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் சங்க உறுப்பினர்களுக்கு அதிகளவில் கறவை மாட்டுக் கடன் வழங்கிடவும், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்கிடவும், அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் பால் பரிசோதனை கருவிகள் மானியத்தில் வழங்கிடவும் ஆவின் பொது மேலாளர், பால்வளத்துறை துணை மேலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பால்வளத்துறைக்கு தொடர்புடைய துறைகளான தாட்கா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட தொழில் மையம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வங்கிகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு அரசின் மூலமாக செயல்படுத்தப்டும் அனைத்து திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும். பால் உற்பத்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்புடைய அலுவலர்கள் இணைந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியை அதிகப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார். பின்னர் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் பால் கொள்முதல் மற்றும் தேவைகள் குறித்து மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார். பின்னர், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் 13 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 136 பயனாளிகளுக்கு ரூ.1,29,00,000 மதிப்பிலான கறவை மாடு கடன், 13 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 73 பயனாளிகளுக்கு ரூ.61,43,000 மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன், ஒரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு ரூ.4,00,000 மதிப்பிலான தாட்கோ கடன் உதவி, 10 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2,002 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.74,15,368ம், ஒரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ.82,000 மதிப்பில் வெண் நிதி திட்டத்தின் மூலம் கடன் உதவி, 2 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவி, 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.25,80,525 மதிப்பீட்டில் பால் பரிசோதனை கருவிகளும் என மொத்தம் 85 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2,227 பயனாளிகளுக்கு ரூ.2,95,70,893 மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அமைத்து வெற்றிகரமாக பால் உற்பத்தியை செய்து வரும் தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. 4 வருவாய் வட்டங்களை மட்டும் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் 193 சங்கங்கள் மூலம் 18,675 உறுப்பினர்கள் கொண்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,22,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து 19,000 லிட்டர் உள்ளூர் விற்பனை செய்து வருகிறது. மீதம் உள்ள பாலினை திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு 2,03,000 லிட்டராக அனுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் தூய பால் உற்பத்திகளும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் உள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டில் மட்டும் உபரி லாபம் ஈட்டிய 43 சங்கங்களில் பால் வழங்கிய உறுப்பினர்களுக்கு கூடுதல் கொள்முதல் விலையாக ரூ.351.72 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பின்னர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியினை பெருக்கிடவும், விற்பனையினை அதிகரித்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது, பெரம்பலூரில் மட்டும் கடந்த ஆண்டில் மட்டும் 70 கோடி வட்டியில்லா கடனும், 63 கோடி வட்டியுடன் கூடிய கறவை மாட்டுக்கடனும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களிலும் பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றியங்களில் கூடுதலான அரசு திட்டங்கள் பால்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. தாட்கோ மூலம் 50 சதவீத மானியத்துடன் அதிக பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாட்டுக் கடன் உள்ளிட்ட கடனுதவி கேட்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய கடனுதவி வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகையான கடனுதவிகள் வழங்கப்படுகின்றது, ஒருமுறை கடனுதவி பெற்று கடனை முறையாக திரும்ப செலுத்திய நபர்கள் மீண்டும் கடனுதவி பெறுவதற்கு என்னென்ன நடைமுறைகள் உள்ளது, கறவை மாடுகள் வளர்ப்பு, பால் கொள்முதல் தொடர்பாக அரசின் திட்டங்கள் என்னென்ன செயல்படுத்தப்படுகின்றது என ஒவ்வொரு விவசாயிக்கும் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஒரு பயிற்சிக் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, பால்வளத்துறையின் சார்பில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன் மாவட்ட வருவாய் அலுவலர்/ ஆவின் பொது மேலாளர் (திருச்சி) எஸ்.முத்துமாரி, பெரம்பலூர் துணைப்பதிவாளர் பால்வளம் ரெ.நாராயணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






