மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மாவிலங்கை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (12.03.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறைகளின் அலுவலர்களும் நேரில் வந்து அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மக்களுக்கு விளக்கிக் கூறி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றிற்கு உரிய தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற முகாம்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில், மக்களைத் தேடிச் சென்று அப்பகுதி மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளவும், அந்த திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. செட்டிகுளம் பகுதியில் சின்ன வெங்காய விவசாயம் அதிகம் செய்யப்படுகின்றது. எனவே விவசாயிகள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மானிய விலையில் வெங்காயக் கொட்டகை வழங்கும் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் என அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் சார்பில் இணையவழி பட்டா மாற்றம் மற்றும் பட்டா நகல்,வீட்டுமனை பட்டா என 105 பயனாளிகளுக்கு ரூ.54,00,000 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை, என 48 பயனாளிகளுக்கு ரூ.7,51,500 மதிப்பீட்டிலும், 18 பயனாளிகளுக்கு புதிய குடும்ப மின்னணு அட்டைகளையும், வேளாண்மை துறையின் சார்பில் பல்வேறு வேளாண் தொடர்பான திட்டங்களில் 09 பயனாளிகளுக்கு ரூ.73,532 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.2,64,000 மதிப்பீட்டில் வெங்காய கொட்டகை அமைப்பதற்கான பணி ஆணையினையும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 02 பயனாளிகளுக்கு ரூ.20,00,000 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.70,00,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை (சபாதி) சார்பில் மருத்துவ கல்வி உதவித்தொகை 04 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் மாடு வளர்த்தல் மற்றும் வீடு கட்டுவதற்காக 02 பயனாளிகளுக்கு ரூ.80,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர் கடன் 13 நபர்களுக்கு ரூ.10,25,700 மதிப்பீட்டிலும் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு ரூ.1,67,94,732 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு சொர்ணராஜ், வேளாண்மை இணை இயக்குநர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளர் க.கவியரசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story





