நாமக்கல்லில் வருகிற 25ம் தேதி கடையடைப்பு போராட்டம் வணிகர் சங்க பேரமைப்பினர் அறிவிப்பு!
Namakkal King 24x7 |20 Nov 2024 12:34 PM GMT
நவம்பர் 25ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் !
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லக்கோரி, வருகிற 25ம் தேதி நாமக்கல் நகரில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கருணாகரன் வரவேற்றார், பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாணிக்கம், மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் நகரில் பஸ்களை ஆங்காங்கு ரோடு ஓரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகருக்குள் போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். நாமக்கல் நகரில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் வந்து செல்வதற்கு போதுமான வழி உள்ளது. ஆனால் பஸ்கள் உள்ளே வந்து செல்வதில்லை. இதனால் பஸ் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்டில் நீண்டகாலமாக கடைகள் வைத்து நடத்தி வரும் வியாபாரிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லக்கோரி, பொதுமக்களுடன் இணைந்து, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வருகிற நவம்பர் 25ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பேரமைப்பில் இணைந்துள்ள 46 வணிகர் சங்கங்களின் ஆதரவோடு கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதென மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முடிவில் நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளர் முரளி நன்றி கூறினார்.
Next Story