அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனத்தை வழங்கிய கிராம மக்கள்

அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக  ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனத்தை வழங்கிய கிராம மக்கள்
X
வாகனம் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு திருமங்கலக்கோட்டை கீழையூர், திருமங்கலக்கோட்டை மேலையூர், அருமுளை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில், சுமார் 5 கி.மீ., தூரம் தினமும், பள்ளிக்கு மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் வந்து செல்கின்றனர். இதையடுத்து, கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சிக் குழு அறக்கட்டளை" ஒன்றை உருவாக்கினர். இதற்கு தலைவராக டாக்டர் செல்வராஜ், செயலாளராக இளங்கோ உள்ளனர். இந்நிலையில், "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை" சார்பில்,பள்ளிக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேன் ஒன்றை வாங்கி, புதன்கிழமை பள்ளி தலைமையாசிரியர் வளர்மதியிடம் ஒப்படைத்தனர். இவ்விழாவில், அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்  செல்வராஜ் ,  செயலாளர் தியாக. இளங்கோ, பொருளாளர் வீ. ராசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிரவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்  ராஜேந்திரன், தங்கதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் கண்மணி,  ஆடிட்டர் துரைராஜ் ராஜேந்திரன்  மற்றும் கிராம மக்கள் கலந்துக்கொண்டனர். இது குறித்து "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சிக் குழு அறக்கட்டளை" நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் உயர்கல்விக்காகவும் நிதியை செலவிட திட்டுள்ளோம். சைக்கிளில் வரும் பல மாணவர்கள் வேன் வசதியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களும் பள்ளிக்கு பத்திரமாகவும், நேரத்துடனும் வந்து செல்வார்கள். பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" இவ்வாறு தெரிவித்தனர்.
Next Story