வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட ஜோடி சேவல்கள் பங்கேற்பு.
தேனியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனைகளை முன்னிட்டு தேனி மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் வெற்றுக் கால் சேவல் சண்டைப் போட்டி நடத்தப்பட்டது. தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியை எம்.பி தங்க தமிழ்செல்வன் துவக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட ஜோடி சேவல்கள் பங்கேற்றன. இதற்காக 20 களங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 15 நிமிடம் என பந்தயம் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெற ஆடுகளத்தில் இறக்கிவிடப்பட்ட சேவல்கள் ஆக்ரோஷமாக, ஒன்றோடொன்று சீறிப்பாய்ந்து மோதியது. போட்டியில் அதிக பந்தயம் அடித்த முதல் மூன்று சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இது தவிர போட்டியில் பங்கேற்ற அனைத்து சேவல்களின் உரிமையாளர்களுக்கு மின்விசிறி,மைக்ரோவேவ் ஓவன், குக்கர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை தேனி எம்.பி.தங்கதமிழ்செல்வன் வழங்கினார். சேவல் சண்டையை தேனி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
Next Story



