முன்னுரிமை கடன்களுக்காக நடப்பு நிதியாண்டிற்கு ரூ.25,331.32 கோடி ஒதுக்கீடு - ஆட்சியர்

X
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 2025-26 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம், வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய, மாநில கடன் திட்டங்கள் தொடர்பாகவும், மாவட்டத்தின் வருடாந்திர கடன் இலக்கின் அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதி ஆண்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் 2025-2026 நிதியாண்டில் வேளாண்மை துறை சார்ந்த பணிகளுக்கு 20,929.61 கோடி ரூபாயும், சிறு குறு தொழில் சார்ந்தது துறைக்கு 3391.1 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 50.78 கோடி ரூபாய் என 6 பிரிவுகளின் கீழ் தோராயமாக மொத்தம் 25331.32 கோடி ரூபாய் முன்னுரிமை கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கியாளர்கள் இந்த இலக்கினை 100 சதவீதம் பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிழ்ச்சியில், மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

