பேராவூரணி தொகுதிக்கு ரூ.26 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் முதல்வர், துணை முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

X

எம்எல்ஏ நன்றி
பேராவூரணி தொகுதிக்கு சுமார் 26 கோடி ரூபாயில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறை அமைச்சர்களுக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில், பேராவூரணி பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம், அதேபோல் இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதுகாக்கவும், குடிநீர், விவசாய பயன்பாட்டை பாதுகாக்கும் வகையில் மாவடுகுறிச்சி அருகே பூனைகுத்தி காட்டாற்றின் குறுக்கே ரூபாய் 4 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை, நீண்ட காலமாக இப்பகுதி விவசாயிகள், விவசாய அமைப்புகள் கோரிக்கையை ஏற்று கல்லணைக் கால்வாய் மெயின் வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல், தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு, அதேபோல் கிளை ஆறுகளைத் தூர்வார ரூ.3 கோடி மற்றும் பெரிய தெற்குக்காடு - மேல ஓட்டங்காட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமச் சாலைகளை புதியதாக அமைக்க, மேம்படுத்த ரூ.10 கோடி, திருச்சிற்றம்பலம் அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பணிக்காக ரூ.1.28 லட்சம் என சுமார் ரூ.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை சார்ந்த அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மக்கள் சார்பில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும், மீதமுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவை அனைத்தையும், தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர், நிர்வாகத்திறன் கொண்ட துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, பெற்றுத்தந்து, பேராவூரணி தொகுதியை குறை இல்லாத தொகுதியாக மாற்றப் பாடுபடுவேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next Story