“புதுமைப் பெண்” விரிவாக்க திட்டத்தின் கீழ் 2,681 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000

X
சிவகங்கை மாவட்டத்தில் “புதுமைப் பெண்” விரிவாக்க திட்டத்தின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயின்று வரும் 49 கல்லூரிகளைச் சார்ந்த 2,681 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் நிகழ்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், இரண்டாம் கட்டமாக “புதுமைப் பெண்” விரிவாக்க திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் நிகழ்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்டத்தினை” கடந்த 05.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, கடந்த 08.02.2023 அன்று புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினையும் தொடங்கி வைத்தார்கள். இரண்டாம் கட்டத்தின் விரிவாக்கமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் “புதுமைப் பெண்” விரிவாக்க திட்டத்தினை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள். அந்நிகழ்ச்சியின் வாயிலாக மாணவிகளுக்கு முத்தான கருத்துக்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம், அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் புதிதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மட்டுமின்றி, புதிதாகவும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்திடும் பொருட்டும், பெண் கல்வியை ஊக்குவிப்பது மட்டுமன்றி உயர் கல்வியில் பெண்களின் சேர்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரிவுபடுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர்கள் ரூ.1,000 பெற்று பயனடையவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 49 கல்லூரிகளில் பயின்று வரும் 2,681 மாணவியர்களுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 57 கல்லூரிகளில் 4,500 மாணவிகள் பயன்பெற்று வருவதுடன், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இவ்விரிவாக்க திட்டத்தின் வாயிலாக நமது மாவட்டத்தில் மொதம் 7,181 மாணவிகள் பயன்பெறவுள்ளனர். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள், மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் ரூ.1,000/- தொகை வாயிலாக பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றி கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தினை செயல்படுத்திடும் விதமாக, தற்போது மாணவியர்களுக்கு Welcome Kit ஆக தமிழ் பெருமிதம் மற்றும் உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆகிய இரு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழகத்தில் உயர் கல்வி கற்கும் ஆர்வமும் மாணாக்கர்களிடையே அதிகரித்துள்ளது. மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் தடையாக இருந்திட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களாக இருந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். இதனை மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு, நல்லமுறையில் பயின்று, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

