காங்கேயம் அருகே வெறிநாய்கள் கடித்து 27 ஆடுகள் பலி - தொடரும் நாய்களின் தாக்குதல் - நஷ்டமடையும் விவசாயிகள்
Kangeyam King 24x7 |19 Sep 2024 8:14 AM GMT
காங்கேயம் அருகே தொட்டிபட்டி பகுதியில் மோகன்குமார் என்பவர் தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 70 ஆடுகளை கடித்துக் குதறிய வெறி நாய்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 27 ஆடுகள் பலி. மேலும்10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம். காங்கேயம் பகுதியில் வெறி நாய்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியான தொட்டியபட்டி அமரங்காட்டு தோட்டத்தில் விவசாயி மோகன்குமார் என்பவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தொடர்கதையாக உள்ளதால் ஆடு,மாடு கால் நடைகளை வளர்த்து வருகின்றார். மேலும் காங்கேயம் பகுதியில் விவசாயிகளின் வருமானமே இந்த கால்நடை வளர்ப்பை நம்பித்தான் உள்ளது. இந்நிலையில் விவசாயி மோகன்குமார் சுமார் 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பகலில் ஆடுகளை மேய்ந்து விட்டு இரவு தோட்டத்தில் உள்ள பாட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டார். இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 27 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்துள்ளது. மேலும் 10 திற்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என தெரிவிக்கின்றனர்.மேலும் உயிருக்கு போராடும் ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் எனவும் கூறப்படுகின்றது.விவசாயி மோகன்குமாருக்கு ரூ.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் .மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளதாகவும் , பலியான ஆடுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் காங்கேயம் நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story