தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம்  டன் நெல் கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம்  டன் நெல் கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி  தகவல்
X
அமைச்சர் பேட்டி
தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம்  டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் சனிக்கிழமை, அதிதிறன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, நெல்லில் சன்ன ரகத்துக்கு ரூ.1,960-லிருந்து ரூ.2,450-ம், பொது ரகத்துக்கு ரூ.1,905 லிருந்து ரூ. 2,405 -ம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊக்கத்தொகை நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.130-ம், பொது ரகத்துக்கு ரூ.107-ம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  வருங்காலத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 36 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 62 ஆயிரம்  டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சரித்திர சாதனையாகும்.  கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை  பல்வேறு வாகனங்கள் மூலம்  மற்ற மாவட்டங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. திறந்தவெளியில் நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செமி குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வரை 1.90 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் இதுவரை 18.10 லட்சம் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.  2,600 ரேஷன் கடைகள் பகுதி நேரக் கடைகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் பொருட்களை பெற வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது இதில் சில இடர்பாடுகள் உள்ளது. வருங்காலத்தில் அதை நிவர்த்தி செய்து, காலதாமதம் ஆகாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுத்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பெற கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில்  ரூ.789 கோடி நிதியை வழங்கி உள்ளது எங்களுக்கு திருப்தியாக உள்ளது" என்றார்.
Next Story