ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சி, அரசு சட்டக்கல்லூரி கலையரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளையும் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அங்கீகாரித்து மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையினை உருவாக்கினார்கள். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியே ஒரு துறையை ஏற்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் உரிமையை பாதுகாத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த மாற்றுத்திறனாளிகள் நலவாரியம், மாத உதவித் தொகை, பராமரிப்புத் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மேற்படிப்பு பயில உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் தனியாக இருக்கை இது போன்று எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை, திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம், கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதி செய்திடும் நோக்கில் உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தாழ்வுதளம், போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவார்கள்.உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் டிசம்பர் 3 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கமும் சேவை வழங்கும் தொண்டு நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். மாற்றுத்திறனாளிகளைத் தனியாகப் பிரிக்காமல், அவர்களைச் சமூகத்தின் அங்கமாக அங்கீகரித்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க 200 தன்னார்வலர்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். மேலும் உங்களுக்கான அரசின் திட்டங்களை வழங்க நாங்கள் அனைவரும் அர்பணிப்போடு செயல்படுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,92,640/- மதிப்பில் திருமண உதவித்தொகை, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,57,600/- மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.43,470/- மதிப்பில் செல்போன், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,08,334/- வங்கி கடன் மானியம், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63,590/- மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,855/- மதிப்பில் காதொலி கருவி என மொத்தம் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,75,489/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 23 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.முன்னதாக, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி, உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் அருண், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.கலைச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



