ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 270 டன் பச்சைப்பயறு, உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி முடிய விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேலம், மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பச்சைப்பயறு 20 டன் கொள்முதல் செய்யவும், சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலமாக உளுந்து 250 டன் கொள்முதல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கு உலர வைக்கப்பட்ட தரமான பச்சைப்பயறு கிலோவுக்கு ரூ.86.82-ஆகவும், உளுந்து கிலோவுக்கு ரூ.74-ஆகவும் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம், மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், உளுந்துக்கு சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

