சென்னை: கத்திமுனையில் துணிப்பை கடை உரிமையாளரிடம் ரூ.2.70 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது

X
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மைனர் அலி (39). அம்பத்தூரில் துணிப்பை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 19-ம் தேதி மாலை, கீழ்பாக்கம், கார்டன் பகுதியில் உள்ள ஏடிஎம்-ல் பணம் போடுவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பையில் வைத்துக் கொண்டு, நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், மைனர் அலியை கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த பணப் பை மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்து தப்பி சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த மைனர் அலி இது தொடர்பாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். மைனர் அலியிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டது, வியாசர்பாடி மணிகண்டன் என்ற மணிஸ் (45), புரசைவாக்கம் கணேஷ்குமார் என்ற ஜான்சன் (39), சென்னை பட்டாளம் பால கிருஷ்ணன் (42) மற்றும் அவர்களது கூட்டாளி என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

