ஆரணி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இந்து முன்னணியினர் 28 பேர் கைது.
ஆரணி, ஆரணி சூரிய குளத்திற்கு தண்ணீர் வரும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இந்து முன்னணியினர் 28 பேரை நகர போலீசார் கைது செய்தனர். ஆரணி நகரின் மையப்பகுதியில் சிறப்பு வாய்ந்த சூரிய குளம் உள்ளது. இக்குளத்திற்கு தண்ணீர் வரத்து சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து ஏரிக்கால்வாய் மூலம் வருகிறது. இந்த ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்து குளத்திற்கு தண்ணீர் வராதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தற்போது கழிவு நீர் மட்டுமே குளத்திற்கு செல்கிறது. இதனால் ஆரணியில் நீர் ஆதாரத்திற்கு சூரிய குலம் விளங்கிவரும் நிலையில் தற்போது கழிவு நீர் மட்டுமே வருவதால் ஆரணி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆரணி சூரியகுளத்திற்கு வரும் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் மனு கொடுக்க சென்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கோ மகேஷ் கோட்ட அமைப்பாளர் டிவி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மனு கொடுக்க சென்றனர். உடன் பாஜக மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் சரவணன், நகர தலைவர் மாதவன், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கராத்தே வேணு உள்ளிட்ட ஏராளமானோர் மனு கொடுக்க சென்றனர். அப்போது ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி போளூர் டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அகிலன், மகாலட்சுமி, எஸ்.ஐக்கள் ஷாபுதீன், ஆனந்தன் மற்றும் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். பின்னர் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகளிடம் போலீசார் நீங்கள் அனுமதி பெறாமல் மனு கொடுக்க வந்துள்ளீர்கள் ஆகையால் கைது செய்யப்படுகிறீர்கள் என தெரிவித்தனர். இதற்கு இந்து முன்னணியினர் மனு கொடுக்க ஏன் அனுமதி வாங்க வேண்டும். நாங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லையே என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் தரப்பில் கும்பலாக ஏன் செல்கிறீர்கள் நீங்கள் கும்பலாக இருப்பதால்தான் கைது செய்கிறோம் என்று இரு தரப்பினரும் வாக்குவாதம் நடந்தது. இதனால் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலி அம்மன் திருமண மண்டலத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 26 பேர் ஆண்களும், இரண்டு பேர் பெண்களும் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story




