தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் பழுதுபார்க்கும் பணியில் தீவிரம்...  மே 29 இல் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் பழுதுபார்க்கும் பணியில் தீவிரம்...    மே 29 இல் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு 
X
மீன்பிடி தடைக்காலம்
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தடைக் காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தஞ்சை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் அதிகமான படகுகள் சேதமடைந்தன. பெரும்பாலான விசைப்படகு உரிமையாளர்கள் சேதமடைந்த படகுகளை பழுதுபார்க்க தேவையான நிதி ஆதாரம் இல்லாததால் மீன்பிடி தொழிலை விட்டே சென்று விட்டனர்.  மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சனையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் புதிதாக விசைப்படகு வாங்கி பதிவுசெய்து தொழில் செய்ய அனுமதி இல்லாத காரணத்தால் தஞ்சை மாவட்டத்தில் மலிப்பட்டினம் , கள்ளிவயல்தோட்டம் , சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில், சுமார் 133 விசைப்படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடி தொழில் செய்து வருகிறது.  மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் கரையில் ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணிகள், வர்ணம் பூசுதல் வலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜூதீன் கூறியது, விசைப்படகுகள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருவதில் கிடைக்கும் வருவாயில் படகுகளில் சிறு சிறு வேலைகள் இருந்தால் அவ்வப்போது சரிசெய்யப்பட்டு தொழில் நடைபெற்று வரும்.  கடுமையான வெயில் காலத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் முழுமையாக கரையேற்றி மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.  தற்போதைய சூழ்நிலையில்   மரவேலை கூலி, பலகை இணைப்புக்கட்டை, மட்டி அடித்து பைபர் வர்ணம் பூசி ஓரளவு திருப்திகரமாக படகுகளை மராமத்து பார்ப்பதற்கு ரூ.5 லட்சம் வரை ஒரு விசைப்படகுக்கு செலவாகிறது.  தொழில் இல்லாத நிலையில் பெரும்பாலான விசைப்படகு உரிமையாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி மராமத்து பணிகள் பார்க்கும் நிலையில் உள்ளனர். நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க மீன்பிடித் தடை காலங்களில் விசைப்படகுகள் மராமத்து பணிகளுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்" என்றார்.   இந்நிலையில், மே 29 ஆம் தேதி விசைப்படகுகளையும்,  ஜூன் 5 ஆம்தேதி நாட்டுப்படகுகளையும் மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்குப் பின் அனுமதி வழங்கப்படும் படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியும்.  மீன்பிடி தடைக்காலத்தை கடுமையான வெயில் காலத்தில் நடைமுறைப்படுத்தாமல் மழை பெய்யும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றி வைக்கவேண்டும். அல்லது தொடர்ச்சியாக 61 நாட்களுக்கு தடைவிதிக்காமல் இரண்டு தவணைகளாக தடைக்காலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Next Story