அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி : ஒருவர் கைது

X
- தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருளானந்தம்மாள் நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் விக்னேஷ்வர். இவர் அரசுப் பணிக்காக முயற்சிகள் செய்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன், சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த குலசேகரன் என்பவரின் மகன் சத்ய நாராயணன் (59) ஆகிய இருவரும் அறிமுகம் ஆகி உள்ளனர். விக்னேஸ்வர் அரசுப் பணியில் சேர முயற்சிகள் மேற்கொள்வதை அறிந்த ரவிச்சந்திரன், சத்யநாராயணன் இருவரும், "எங்களுக்கு அரசு தேர்வாணையத்தில் உயர் அலுவலர்களை தெரியும். உங்களுக்கு அரசு பணி வாங்கித் தருகிறோம்" என தெரிவித்துள்ளனர். இதற்காக விக்னேஸ்வரிடமிருந்து ரூ.29 லட்சத்தை கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை பல தவணைகளில் வாங்கி உள்ளனர். ஆனால், அரசுப் பணி வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷ்வர் பலமுறை இருவரிடமும் கேட்டு முறையான பதில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விக்னேஷ்வர் புகார் செய்தார். இதன் பேரில் ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஸ்வரிடமிருந்து ரவிச்சந்திரன், சத்யநாராயணன் இருவரும் பணம் பெற்றது உண்மை என தெரிய வந்தது. தொடர்ந்து சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சத்யநாராயணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
Next Story

