ரயிலில் விதிமுறையை மீறி பயணம் செய்த 29,710 பேருக்கு

X
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களில் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் உத்தரவின் பேரில் வணிக மேலாளர் பூபதி ராஜா மேற்பார்வையில் வணிகப்பிரிவு அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ரெயில்வே கோட்டப்பகுதியில் இயங்கும் ரெயில்களில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் டிக்கெட் இன்றியும், முன்பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முறைகேடாக பயணம் செய்தது, அதிகப்படியான லக்கேஜ் வைத்துக் கொண்டு பயணித்த பயணிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் டிக்கெட் இன்றி பயணித்த 13 ஆயிரத்து 621 பயணிகளிடமிருந்து ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரத்து 472-ம், முன்பதிவு டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 16 ஆயிரத்து 3 பேரிடம் இருந்து ரூ.85 லட்சத்து 79 ஆயிரத்து 78 அபராதம் விதித்துள்ளனர். இதே போல அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் லக்கேஜ் எடுத்துச் சென்ற 86 பயணிகளிடம் இருந்து ரூ.58 ஆயிரத்து 184 அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 29 ஆயிரத்து 710 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 4 லட்சத்து 46 ஆயிரத்து 434அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

