சேலத்தில் ஆதார் கார்டில் போட்டோவை மாற்றி வீட்டுக்கடன் வாங்க முயன்ற 3 பேர் கைது
Salem (west) King 24x7 |26 Aug 2024 8:09 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவிக்கு ஆதார் கார்டு எடுக்க சேலம் சுகவனேசுவரர் கோவில் வணிக வளாகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை வைத்திருக்கும் உறவினரான அம்மாப்பேட்டையை சேர்ந்த வினோத்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், செல்வத்தின் ஆதார் கார்டு மற்றும் அவரது மனைவியின் போட்டோ உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆதார் கார்டு எடுத்து தருவதாக கூறினார். தொடர்ந்து 4 நாட்கள் கடந்த நிலையில் செல்வத்தின் ஆதார் கார்டை வினோத்குமார் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர், அந்த பிரிண்டிங் கடைக்கு சென்று மனைவியின் புதிய ஆதார் கார்டு என்னாச்சு? என்று கேட்டுள்ளார். அப்போது, அவரது ஆதார் கார்டை வைத்து மோசடி சம்பவத்தில் வினோத்குமார் ஈடுபடுவது போன்று சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்வத்தின் ஆதார் கார்டு முகவரியில் சேலம் பொன்னம்மாப்பேட்டை சத்தியா நகரை சேர்ந்த செந்தில் (42) என்பவரின் போட்டோவை வைத்து புதிய ஆதார் கார்டை போலியாக உருவாக்கி வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த நூதன மோசடியில் வினோத்குமார், அவரது கூட்டாளியான யாதவ்காந்த் (25), செந்தில் ஆகியோர் சேர்ந்து ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story