பன்னாட்டு நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் வருமானவரி சோதனை
Chennai King 24x7 |18 Dec 2024 6:03 AM GMT
சென்னையில் பன்னாட்டு நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, சென்னையை அடுத்த போரூரில் ‘கெப்பல் ஒன்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ‘பாரமவுண்ட் 1’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ரூ.2.100 கோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் 7 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென இந்த நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன்சாவடியில் உள்ள ‘கென் பைன் ஹோம்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் சென்றது. அதன்படி, இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 8 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பெருங்குடியில் உள்ள எல் அண்ட் டபிள்யூ என்ற கட்டுமானம் மற்றும் நிதி நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்கும் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சோதனை முடிவில்தான் தெரியவரும். தொடர்ந்து இன்றும் சோதனை நடக்க வாய்ப்பு உள்ளது என்று வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story