சேலம் அருகே மந்திரவாதி எனக்கூறி, மாந்திரீக பூஜை செய்வதாக பெண்ணிடம் 3½ பவுன் நகையை அபேஸ்
Salem King 24x7 |24 Dec 2024 1:28 AM GMT
மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மிசின் கிணறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி கலைவாணி (வயது 30). நேற்று வழக்கம் போல் கணவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் கலைவாணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். பின்னர் அவர் கலைவாணியிடம் குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை சரி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கலைவாணி பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அபோது, ஒரு சொம்பில் நிறைய தண்ணீர் நிரப்பி அதற்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு கற்பூரம் ஏற்றி அந்த நபர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் கலைவாணியிடம் உனது கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்றி சொம்புக்குள் போட்டால் உங்களுக்கு எந்தவித நோய் நொடியும் வராது என்று தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கலைவாணி கழுத்தில் இருந்த 3½ பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார். கை, கால்களை கழுவுவதற்கு லைவாணி சென்றபோது சொம்புக்குள் இருந்த தாலிசங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார். இந்த மோசடி குறித்து கலைவாணி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பூஜை என்ற பெயரில் அபேஸ் செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கொண்டலாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story