கோவிலுக்கு செல்லும் பாலம் இடிந்தது 3 பேர் காயம்

X
குமரியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் சிவாலய ஓட்டம் நடந்தது. இதில் 9-ம் சிவாலயமான வில்லுக்குறி பகுதியில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தும் வாகனங்களிலும் வந்தனர். பக்தர்கள் சிலர் வில்லுக்குறி இரட்டைக் கரை கால்வாயில் நீராடி விட்டு அப்பகுதியில் உள்ள இரண்டு சிறு பாலங்கள் வழியாக மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். இந்த இரண்டு பாலங்களும் பழமையானதும், விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனிடையே சிவராத்திரி முன்னிட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பாலங்கள் வழியாக செல்வதால் இந்து அறநிலைத்துறை சார்பில் தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில் பழைய பாலம் இரண்டாக உடைந்து கால்வாயில் விழுந்தது. இதில் பாலத்தில் நடந்து சென்ற பக்தர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சக பக்தர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பழைய பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Story

