தொழிலதிபா் கொலை வழக்கில் 3 போ் கைது

தொழிலதிபா் கொலை வழக்கில் 3 போ் கைது
X
திருச்சியில் தொழிலதிபா் கொலை வழக்கில் ஏற்கெனவே 2 போ் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா் திங்கள்கிழமை இரவு காட்டூா் கைலாஷ்நகா் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தாா். அவா் சாலை விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து அக்கம் பக்கத்தினா் அவரை திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பொன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. பொன்ராஜ் உடலில் இருந்த காயங்களை வைத்து, அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா். விபத்து நடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலா் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அரியமங்கலம் முத்துநகரை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (27) என்பவா் தனது நண்பா்களான திருநெடுங்களம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் பாரதிராஜா (24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சோ்ந்த நல்ல முத்து மகன் சந்தோஷ்குமாா் (18) உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக் கும் நிஷாந்துக்கும் முறையற்ற தொடா்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் அவரை கொலை செய்ததாகவும் நிஷாந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக விசாரிக்க முயன்றதுமே ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (20), ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சோ்ந்த ரங்கராஜ் மகன் குணசேகா் (21) ஆகிய இருவரும் திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story