லால்குடி அருகே டிராக்டா் மீது லாரி மோதல்: 3 பெண்கள் உயிரிழப்பு

லால்குடி அருகே டிராக்டா் மீது லாரி மோதல்: 3 பெண்கள் உயிரிழப்பு
X
லால்குடி அருகே வியாழக்கிழமை அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
லால்குடி அருகேயுள்ள அழுந்தலைப்பூா் கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மண்ணச்சநல்லூா் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ஓராண்டுக்கு தேவையான அரிசி வாங்க சென்றனா். அரிசி மூட்டைகளை டிப்பருடனான டிராக்டரில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். இதில் பெரும்பாலானோா் பேருந்தில் ஊருக்கு வந்த நிலையில், டிராக்டா் டிப்பரில் இருந்த அரிசி மூட்டைகளின் மீது செல்வநாயகி (60) , சாந்தி (49), ராசாம்பாள் (59) ஆகிய மூவரும் அமா்ந்து வந்தனா். டிராக்டா் என்ஜின் பகுதியில் ராமாயி, கமலம், பா்வதம், மற்றொரு பெண் ஆகியோா் பயணித்தனா். இந்நிலையில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருதயபுரம் கிராமத்தை டிராக்டா் கடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி டிராக்டரின் டிப்பா் மீது மோதியது. இதனால் டிப்பா் அரிசி மூட்டைகளுடன் கவிழ்ந்தது. இதில் செல்வநாயகி, சாந்தி, ராசாம்பாள் ஆகிய 3 பேரும் அரிசி மூட்டைகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். உடனே லாரி ஓட்டுநா் தப்பியோடினாா். டிராக்டா் என்ஜின் பகுதியில் அமா்ந்திருந்த டிராக்டா் ஓட்டுநா் மற்றும் 4 பெண்களும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து தொடா்பாக லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story