கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்
X
குண்டாஸ்
தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டியைச் சேர்ந்த குருந்தையன் மார்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஏழுப்பட்டியைச் சேர்ந்த ராஜா உள்பட 14 பேரை கைது செய்தனர். இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக் (25), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (33), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் (37) ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரை செய்தார்.  இதன் பேரில் இவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதன்படி, கார்த்திக், மணிகண்டன், வடிவேல் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் மீது...: இதேபோல, தஞ்சாவூர் அருகே மருங்குளம் பகுதியில் 8 வயது சிறுமியை மார்ச் 23 ஆம் தேதி முள்ளுக்காட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாக அதே பகுதியைச் சேர்ந்த கண்ணனை (38) வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். இவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story