நாகை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான குளத்தின் கரையில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடுகள்

தொடர் கோடை மழையால் இடிந்து விழுந்தன - வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
நாகை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான குளத்தின் கரையில், லோகநாதன் (75), ராமச்சந்திரன் (40), பாஸ்கரன் (60) ஆகிய 3 பேர் நகராட்சி அனுமதியின்றி வீடு கட்டி வசித்து வந்தனர். வீடு எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளை காலி செய்யும்படி நகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கோடை மழையால், நேற்று முன்தினம் இரவு 3 வீடுகளும் இடிந்து விழுந்தன. அபாயம் உணர்ந்து 3 வீடுகளிலும் வசித்து வந்தவர்கள் வீட்டை காலி செய்து விட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த, நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, நகராட்சி கவுன்சிலர்கள் முகமது நத்தர், தமயந்தி, திமுக நகர செயலாளர் சிவா ஆகியோர் இடிந்த வீடுகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story