கஞ்சா வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம்

X
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ். பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கஞ்சா விற்பனை கும்பல் மீதான நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. ஐந்து மாதங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், இளம் சிறார்களும் அடங்குவர். இந்த நிலையில் கடந்த மாதம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முளகுமூடு பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் அருண் (23), நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சியப்பன் (27), கோட்டார் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (44), ஆகியோரை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். கைதான இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு எஸ். பி. ஸ்டாலின் கலெக்டர் அழகு மீனாவிற்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதையடுத்து அருண், பேச்சியப்பன் மற்றும் முருகன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

