திருவள்ளுவர் சிலைக்கு 3 புதிய படகுகளை விட வேண்டும்

X
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை காண்பதற்கு வசதியாக பழுதடைந்த படகை மாற்றி விட்டு மூன்று புதிய படகுகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைத்தப் பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பலரும் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இந் நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் மூன்று படகுகளில் ஒரு படகு பழுதான நிலையில் ஒதுக்கி விடப் பட்டுள்ளது. இதினிடையே படகு போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப் பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 25 ருபாயும், சிறியவர்களுக்கு 10 ருபாய் கட்டணமும் அதிகரிக்கப் பட்டுள்ளது. பயணிகள் கூட்டத்தை குறைப்பதற்காகவே படகு கட்டணத்தை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பழைய கட்டணத்திலேயே படகு போக்குவரத்தை செயல் படுத்திட வேண்டும். மேலும் பழுதான பழைய படகை மாற்றி விட்டு அரசு ஏற்கனவே அறிவித்திருந்த காமராஜர், நேசமணி, ஜி.யு.போப் பெயரில் மூன்று படகுகளையும் உடனடியாக செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

