திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 3 நாட்கள் யோகா பயிற்சி
ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்குவளை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், நேற்று 3 நாட்கள் யோகா பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். பயிற்சியில், திருத்துறைப்பூண்டி அறக்கட்டளையின் சார்பில், யோகா பயிற்சியாளர்களாக பேராசிரியர்கள் பெரியமாயன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு, 140 மாணவர்களுக்கு மனவளக் கலை யோகா பயிற்சி அளித்தனர். உடல் ரீதியிலான பிரச்சினைக்கு மருந்துகள் பல உள்ளன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு ஒரே தீர்வு யோகா மட்டுமே. இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த பழைமையான கலைகளில் யோகா பயிற்சியும் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி அனைத்து நாடுகளிலும், சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது என மாணவர்கள் மத்தியில், யோகா பயிற்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, யோக ஆசனங்களை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தியாக சுந்தரம், ஊராட்சி செயலர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




