திமுக உறுப்பினர் சேர்க்கை ஜூலை 3-இல் தொடக்கம்

திமுக உறுப்பினர் சேர்க்கை ஜூலை 3-இல் தொடக்கம்
X
திமுக
திமுக உறுப்பினர் சேர்க்ககையை தமிழக முதல்வர் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என்றார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு. தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பாக நிலை முகவர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது: திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ளார். தேர்தல் பணிகளை கடந்த 6 மாதங்களாகத் தொடங்கி செய்து வருகிறோம். உறுப்பினர் சேர்க்கையின்போது அவசியம் ஒன்றியச் செயலர்களை வைத்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடங்களாவது பேசினால்தான், அது நமக்கு வாக்காக மாறும். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஜூலை 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பின்னர், ஜூலை 3 ஆம் தேதி முறைப்படி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைக்கிறார். நமது பொறுப்பாளர்களை அழைத்து எப்படி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என சொல்லியுள்ளார். கடந்த முறை விட்டுப்போன ஒரத்தநாடு தொகுதி உள்பட இந்த முறை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். இந்த மண்டலத்திலுள்ள 43 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்றார் அமைச்சர் நேரு. கூட்டத்தில் முன்னிலை வகித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசியது: மத்தியிலும், 17 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்தாலும், மத்திய அரசை துணிச்சலாக எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் மட்டுமே. அவரது கரத்தை வலுப்படுத்த, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார் அவர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எம். ராமச்சந்திரன், து. செல்வம், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story