பட்டுக்கோட்டையில், 3 வயது குழந்தையின் காதை கடித்த குரங்கு  

குரங்கு கடி
பட்டுக்கோட்டையில், மூன்று வயது குழந்தையின் காதை, குரங்கு கடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆர்.வி., இரண்டாவது நகரை சேர்ந்த, திருநாவுக்கரசு – கலைவாணி தம்பதி. திருநாவுக்கரசு அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் திகழினி (3), இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று காலை கலைவாணி வீட்டு, வராண்டாவில் நின்று திகழினிக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று, திகழினியை கடித்து விட்டு ஓடியது. இதில், திகழினி காது நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே திகழினியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.  இது குறித்து கலைவாணி கூறியதாவது: எங்கள் பகுதியில், கடந்த மூன்று மாதங்களாக, குரங்கு தொல்லை உள்ளது. நகராட்சியில், பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. குழந்தைகளை தெருவில், வைத்துக்கொண்டு நிற்க முடியவில்லை. உடனே, குரங்கு தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து ஆர்.வி., நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: பட்டுக்கோட்டை பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. ஆர்.வி., நகர் பகுதியில் இரண்டு நாய்களை குரங்குகள் கடித்து கொன்று விட்டது. ஏற்கனவே, மூன்று குழந்தைகளை காயப்படுத்தி விட்டது. வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வனத்துறையிடம் கேட்டால், தஞ்சாவூரில் ஆள் இல்லை. ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து ஆள் கொண்டு வர வேண்டும் என கூறுகிறார்கள். தற்போது, குரங்கு கடித்து மீண்டும் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story