மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி: 3 மணி நேரமாக வராத மின் ஊழியர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி பலி
தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2 ஆம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்த சுப்பிரமணியன் (54),. விவசாயி. இவரது மனைவி ராமாயி (47),. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு, பூதலூர் சாலையில் உள்ள தங்களின் வயலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை வீசிய பலத்த காற்றினால், மின்கம்பி ஒன்று, கம்பி வேலியில் அறுந்து கிடந்துள்ளது. அப்போது, சுப்பிரமணியனும், ராமாயியும் நடக்கும் போது வழுக்கியுள்ளது. இதனால் கீழே விழாமல் இருக்க கம்பி வேலியை பிடித்துள்ளனர். இதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வயலுக்கு சென்றவர்கள் பார்த்து கள்ளப்பெரம்பூர் காவல்துறைக்கும், மின்வாரியத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், மின்வாரிய அலுவலர்கள்  மூன்று மணி நேரமாக வரவில்லை எனவும், மின்கம்பி தாழ்வாக செல்வதாக பலமுறை மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்பதால், இறந்த தம்பதியினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவக்குமார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், மறியலை கைவிட்டனர்.  இதனால் தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் அரைமணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இறந்த சுப்பிரமணியன், ராமாயி உடலை கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் கைப்பற்றி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்த தம்பதியினருக்கு கார்த்திகேயன் (21), என்ற மகனும், சுப்ரியா (17), என்ற மகளும் உள்ளனர்.
Next Story