பாலுக்கான ஊக்கத்தொகை 3 ரூபாயும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

X
அரியலூர், மார்ச்.18- ஜெயங்கொண்டத்தில் பாலுக்கான ஊக்கத் தொகையை 3 ரூபாயும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயிலில் நின்று பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.தியாகராஜன், ஆண்டிமடம் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினர். விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் எ.சேகர் மாவட்ட குழு உறுப்பினர் கோ.மதியதாஸ் ஆகியோர் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு எல்.செல்வராசு, வ.ரங்கராஜன், சி.சுயமணி, முத்து, நடராஜன், தமிழரசன், காஸ்வீரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் ஆர்ப்பாட்டத்தில் பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கவும், வேளாண் விலை பொருட்களுக்கு ஆண்டுதோறும் விலை அறிவிப்பது போல் பாலுக்கும் விலை உயர்த்தி அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் ஆவிணுக்கு சொந்தமான அனைத்து தீவன ஆலைகளையும் முழுமையாக இயக்கி 50 % மானிய விலையில் உற்பத்தியாளர்களுக்கு தீவனம் வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும், கடைவீதியில் சுற்றி திரியும் கால்நடைகளால் பூ வியாபாரிகள், பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட கடைகளில் கால்நடைகள் புகுந்து காய்கறி பழம் கீரை பூக்களை தின்று நஷ்டப்படுத்துவதை தவிர்க்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே சென்று விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் ஜெயங்கொண்டம் வாரச்சந்தை கட்டுமான பணி நடைபெறுவதால் தற்பொழுது தற்காலிகமாக மீன் மார்க்கெட்டில் (கோடபுல்லை குட்டையில்) இயங்கி வருகிறது. அந்த இடம் போதுமான இட வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலும், வியாபாரிகளுக்கும் வாரச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் நின்று காய்கறிகள் வாங்கி செல்ல முடியாத அளவில் இட நெருக்கடியில் சிரமப்பட்டு வருவதால் பெரிய அளவிலான மாற்று இடத்தை தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் தாராளமாக வந்து சென்று காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸார்கள் பொதுமக்களிடம் கடிந்து கொள்ளும் போக்கை கைவிட்டு புகார் கொடுக்க வரும் புகார்தாரர்களை கண்ணியமாக நடத்த வேண்டும், கண்ணியம் தவறும் போலீசர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தி விவசாயிகள் மற்றும் உமாபதி, பிரியா, கனகவல்லி, அமுதா, சரவணன், உமா, ஆஷா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

