முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்து 124 அடியை கடந்துள்ளது

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்து 124 அடியை கடந்துள்ளது
X
முல்லைப் பெரியாறு
தென் மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நேற்று மீண்டும் 3 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த நிலையில், கேரளாவில் முன் கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா - தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று காலை நிலவரப்படி அணை பகுதியில் 112 மில்லி மீட்டர், தேக்கடியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று விநாடிக்கு 7,735 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு 7,318 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 121.60 அடியில் இருந்து ஒரே நாளில் மேலும் 3 அடிக்கும் மேல் உயர்ந்து 124.75 அடியாகியுள்ளது. அணையில் இருந்து தமிழக குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 100 கன அடியாகவும், நீர் இருப்பு 3,569 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. கடந்த 6 நாட்களில் 114 அடியாக இருந்த நீர்மட்டம் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதே போல், கடந்த ஆறு நாட்களில் முல்லைப் பெரியாறு அணையில் 415 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 283 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை நீட்டித்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆகையால் தமிழ்நாட்டு மக்களின் குடிநீருக்காக மீண்டும் நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story