கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

X
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் முயற்சி செய்வதாக நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை கிழக்கு பாமணி ஆற்றங்கரையில் 2023, ஜூன் 6 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினர், இது தொடர்பாக முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே. முருகானந்தம் (45), சௌந்தர்ராஜன் மகன் மகேந்திரன் (32), நாடிமுத்து மகன் சசிகுமார் (23) ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தராஜன் விசாரித்து முருகானந்தம், மகேந்திரன், சசிகுமார் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
Next Story

