திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேனுக்கு 3 ஆண்டுகள் சிறை!
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சந்திரசேகர்(வயது 54) என்பவர் அப்பகுதியில் வீடு மற்றும் கடைகளை புதிதாக கட்டினார். அந்த கட்டிடத்துக்கு புதிய மின் இணைப்பு கேட்டு வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தார். வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(61) என்பவர் பணியாற்றினார். புதிய மின் இணைப்பை வழங்குவதற்கு போர்மேன் மாரிமுத்து தனக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சந்திரசேகரிடம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை சந்திரசேகரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அவர் கடந்த 12-1-2009 அன்று ரூ.3 ஆயிரத்தை மாரிமுத்துவிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கு மாரிமுத்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.
Next Story