நாமக்கல் மக்களின் வசதிக்கேற்ப 3 புதிய வழித்தடங்களில் 5 பேருந்துகள் இன்று தொடக்கம்.
Namakkal (Off) King 24x7 |12 Nov 2024 6:05 AM GMT
வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி - பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் சா.உமா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.
நாமக்கல் மக்களின் வசதிக்கேற்ப மூன்று புதிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார். கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி நாமக்கல்லில் சேலம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் அருகே முதலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு எவ்வித சிரமம் இன்றி, பயணங்கள் மேற்கொள்ளும் வகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தை ஆதிதிராவிடர் நலத்துறை மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வருகை தந்து அங்கிருந்த பொதுமக்களிடம் பேருந்து நிலைய வசதிகள் மற்றும் பேருந்துகள் தங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கிறதா? தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் என்ன? என கேட்டு அறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள், பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை உயர்த்தி வழங்க வேண்டும், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பேருந்துகள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பழைய பேருந்து நிலையம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம், மற்றும் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி செல்லும் வகையில் புதிதாக 5 பேருந்துகளை புதிய வழித்தடங்கள் நீடித்து அறிவித்து, புதிய வழித்தட 5 பேருந்துகள் காலை 5.30 மணி முதல் இரவு 9:45 மணி வரை இயக்கப்படும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த திட்டமான மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று புதிய வழித்தடங்களை நீடித்து அறிவித்தபடி, பழைய பேருந்து நிலையம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பேருந்துகள் புதிய வழித்தடங்கள் நீடித்தல் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் பழைய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் (பைபாஸ்) புறவழிச் சாலை வரை 6 கீ.மீ தூரத்திற்கு 2 பேருந்துகளும், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் முதல் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை 9 கி.மீ தூரத்திற்கு 2 பேருந்துகளும், அதற்கு கட்டணமாக 10 ரூபாயும், பழைய பேருந்து நிலையம் முதல் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பேருந்தும், அதற்கு கட்டணமாக 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் காலை 5.30 மணி முதல் இரவு 9:45 மணி வரை இயக்கப்பட உள்ளது. நாமக்கல் பழைய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் புறவழிச் சாலை வரை 2 நகரப் பேருந்துகள், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை 2 நகரப் பேருந்துகள், பழைய பேருந்து நிலையம் முதல், புதிய (முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு) பேருந்து நிலையம் வரை 1 பேருந்து என 5 புதிய வழித்தட நகரப் பேருந்துகளின் இயக்கத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், மாநகராட்சி மேயர் து. கலாநிதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை அடுத்து அந்தப் பேருந்துகள் குறிப்பிட்ட தமது வழித்தடங்களில் அனுப்பி வைக்கப்பட்டு, இயக்கப்பட்டன. அப்போது பயணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில் துணை மேயர் செ.பூபதி, மாநகராட்சி ஆணையாளர் R.மகேஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், பேருந்து பயணிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story