கஞ்சா வைத்திருந்த 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

X
கஞ்சா வைத்திருந்த 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். வடலூர்- குறிஞ்சிப்பாடி சாலையில் அண்ணாநகர் அருகே அவர்கள் சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த அசோக், சுரேஷ், ஹரிகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் 5 கிலோ 865 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு தஞ்சையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அசோக், சுரேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ரஞ்சித் ஆஜராகி வாதாடினார்.
Next Story

