செங்கையில் 30 தானியங்கி மழைமானிகள்...தயார் நிலை!
Thiruporur King 24x7 |23 Aug 2024 1:04 PM GMT
செங்கையில் 30 தானியங்கி மழைமானிகள்...தயார் நிலை!:வரும் மழைக்காலத்தில் பயன்படுத்த முடிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில், 30 இடங்களில் தானியங்கி மழைமானிகள் மற்றும் கேளம்பாக்கம், கூவத்துார் பகுதிகளில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. அவற்றை, வடகிழக்கு பருவமழைக்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வது தொடர்பாக, தமிழகம் முழுதும் 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இங்கு, தாலுகா அலுவலக வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில், திறந்தவெளி பகுதியில் தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைப்பதற்கான இடத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வு செய்து, பேரிடர் மேலாண்மை துறையினரிடம் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு தாலுகாவில், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துார், பாலுார், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகள் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் தாலுகாவில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய இடங்களிலும், திருப்போரூர் தாலுகாவில், திருப்போரூர், மானாமதி, நெல்லிகுப்பம், பையனுார் ஆகிய இடங்களிலும் மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளன. செய்யூர் தாலுகாவில், செய்யூர், சூணாம்பேடு, லத்துார், கொடூர், சித்தாமூர் ஆகிய இடங்களிலும், மதுராந்தகம் தாலுகாவில், மதுராந்தகம், கருங்குழி, ஜமீன்எண்டத்துார், எல்.எண்டத்துார், ஓணம்பாக்கம், ஆத்துார், அச்சிறுபாக்கம், பெரும்பாக்கம், வையாவூர் ஆகிய இடங்களிலும் அமைகின்றன. வண்டலுார் தாலுகாவில், மாம்பாக்கத்திலும், தாம்பரம் தாலுகாவில், தாம்பரம், மேடவாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களிலும், பல்லாவரம் தாலுகாவில், பல்லாவரம், பொழிச்சாலுார் ஆகிய இடங்களிலும் என, மாவட்டம் முழுதும் 30 இடங்களில், தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, தானியங்கி மழைமானிகள் சோலாருடன் பொருத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில், கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இவற்றின் வாயிலாக, மழையின் அளவு துல்லியமாக கணக்கீடு செய்யப்படும். இவற்றை கண்காணிப்பதற்கான இணைப்பு, பேரிடர் அலுவலகத்தில் இணைக்கப்படும். இங்கிருந்து, மாவட்டத்தின் மழை அளவு குறித்து தெரிந்துகொள்ளலாம். திருப்போரூர் தாலுகாவில் கேளம்பாக்கத்திலும், செய்யூர் தாலுகாவில் லத்துாரிலும், தானியங்கி வானிலை நிலையம் அமைக்கும் பணிகளும், முழுமையாக நிறைவடைந்துள்ளன. இவற்றின் வாயிலாக, வெப்பநிலை, நிலநடுக்கம் உள்ளிட்ட நிலவங்களை, பேரிடர் அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை நிலையங்களை கண்காணிக்கும் பணியில், வருவாய் ஆய்வாளர்கள் ஈடுபடுவர் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
Next Story