கரூரில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்.
கரூரில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மையம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிங்கராயர் மாநில செயலாளர் சென்னம்மராஜ் மாநில துணைத்தலைவர் விஜயகுமார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்க மாநில பொருளாளர் பெரியசாமி மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 01-07- 2025 முதல் முன் தேதியிட்டு மூன்று சதவீத அகவிலை படியை மத்திய அரசாங்கம் அறிவித்ததை போல தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும். 21 மாத கால ஊதிய குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து மாநில துணைத்தலைவர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது எங்களது போராட்டங்களுக்கு நாங்கள் அழைக்காமலேயே வந்து எங்களது கோரிக்கைகளை நாங்கள் ஆட்சி அமைக்கும் போது நிறைவேற்றி தருவோம் என கூறினர். இது தொடர்பாக தேர்தல் வாக்குறுதியும் அளித்தனர். ஆட்சி அமைத்து நான்கரை ஆண்டு காலம் முடிந்த போதும் கூட இன்னும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் நோக்கோடு செயல்பட்டால் தமிழக முதல்வரை வரும் 2026 தேர்தலில் மீண்டும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக மாற்றுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என தெரிவித்தார். பேட்டி: -விஜயகுமார் - மாநில துணைத்தலைவர் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
Next Story





