ஊழியர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை திருடிய சம்பவம் - ஒருவரை கைது செய்து 16 பவுன் நகை மீட்பு -தலைமறைவான மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு

X
காரியாபட்டியில் அரசு ஊழியர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை திருடிய சம்பவம் - ஒருவரை கைது செய்து 16 பவுன் நகை மீட்பு -தலைமறைவான மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கே.செவல்பட்டி அழகர்சாமி நகரில் சுப்புராஜ் இவரது மனைவி ஆண்டாள் தேவி திருச்சுழி நெடுஞ்சாலைத்துறையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை சுப்புராஜ் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை திருடு போயிருந்தது. இது குறித்து சுப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. மதிவாணன் ஆலோசனையின் பேரில் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகள், மற்றும் செல்போன் உரையாடல்களை கண்காணித்து வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த நிலையில் இன்று மதியம் விருதுநகர் - சிவகாசி சாலையில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வெம்பக் கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் காரியாபட்டியில் கடந்த 4-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 16 பவுன் நகை மீட்டனர். கைது செய்யப்பட்ட கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

