திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட தவம்பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தொன்மையான இந்த கோயிலின் முன்புறம் இருந்த தெப்பம் 30 வருடங்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெப்பக்குளத்தின் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மாசி மகத்தன்று நடைபெற்று வந்த தெப்ப உற்சவம் மீண்டும் இன்று தொடங்கியது. திருக்கோயில் அலங்கார மண்டபத்தில் பிரியா விடை உடன் நற்சாடை தவிர்த்து அருளிய சாமி மற்றும் தவம் பெற்ற நாயகி சாமி உற்சவர் சிலைகள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டை தொடர்ந்து பல்லக்கில் ஊர்வலமாக தெப்ப தேருக்கு உற்சவர் சிலைகள் எடுத்து வரப்பட்டது. கர்நாடக இசையுடன், வான வேடிக்கைகள் முழங்க உற்சவர் சிலைகள் தாங்கிய தெப்ப தேர் 11 முறை குளத்தை சுற்றி வந்தது. கோயில் அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல்துறையினர் மக்கள் பிரதிநிதிகள் தெப்ப தேரில் உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

